ஆன்மீகம் - spiritual, இந்தியா - India, கட்டுரைகள், கதை - Story, புராணம், பொது

தீபாவளி என்றால் என்ன?

‘தீபம்’ என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்றவற்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.

தோற்றம்
தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.

இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர். புராணக் கதைகளின் படி, கிருசுணனின் இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருசுணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தார். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருசுணன் தனது திறமையால் அந்த நரகாசுரனை இறக்க வைக்கிறான்.

கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.

இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.

ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாரீஸ்வரர்’ உருவமெடுத்தார்.

நமக்குள் இருக்கும் இறைவன் ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறான். இந்த ஜோதிவடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும். தீபம் வழிபாடு ஸ்ரீ தீபாவளி என நாம் கொள்ளலாம். நரகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்த நாளை அவன் விருப்பப்படி கொண்டாடும் நாள் என்று ஒரு கதையும் இருக்கிறது.

புராணம் கூறுவது?

ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார். விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது. ஆசைக்கு இணங்கிய பன்றி (விஷ்ணு)   பூமியுடன் கலவி செய்தது. அதன் பயனாய் பூமிகர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான். தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரனுடன் போர் துவங்கினார். விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. காரணம் நரகாசூரன் தனது தாயின் கையால் அல்லாது வேறுயாராலும் கொல்ல முடியாதபடி ஏற்கனவே பிரமாவிடம் வரம் வாங்கி விட்டான்.

உடனே காத்தல் கடவுளான விஷ்ணு பெரிய சதித் திட்டம் தீட்டினார். தனது தேர்ச்சாரதியாக இரண்டாவது மனைவியான சத்தியபாமாவை (பூமாதேவியின் மறுஅவதாரம்) அமர்த்துகிறார். நரகாசூரனோடு நடக்கும் சண்டையின் நடுவில் அம்பு ஒன்று அவரைத் துளைக்கிறது. உடனே விட்டுணு மூர்ச்சை போட்டு விழுந்து விடுகிறார்.
உண்மையில் அவர் மூர்ச்சைபோட்டு விழவில்லை. அப்படி நடித்தார். இதனை விளங்கிக் கொள்ளாத சத்தியபாமா தனது கணவன் உண்மையிலேயே மூர்ச்சையாகி இறந்து விட்டார் என நினைத்து விட்டுணுவின் வில்லை எடுத்து நரகாசுரன் மீது அம்பு எய்தி அவனைக் கொன்று விடுகிறாள். இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

உயிர் போகும் தருவாயில் நரகாசூனிடம் உனது கடைசி ஆசை என்ன? என்று சத்தியபாமா கேட்கிறாள். ‘எனது மறைந்த நாளை மக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டும்” என்கிறான் நரகாசூரன்.

தனது எதிரியைக் கொல்வதற்கு குறுக்கு வழியில் சூழ்ச்சி செய்கின்ற ஒருவரை கடவுள் என்று அழைக்க முடியுமா? ஆனால் புராணிகர்கள் அப்படித்தான் ‘பரம்பொருளை’ சித்தரித்திருக்கிறார்கள்.

எந்தப் புராணத்தை எடுத்துப் பார்த்தாலும் இந்த அசுரர்கள் தேவர்களைக் கொடுமை செய்ததாகவும்;, தேவர்களை மீட்கக் கடவுள் அவதாரம் செய்ததாகவும் சொல்கின்றன.
‘தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று, தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் கொலைக்காக தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்று அன்று” என்று தமிழ்ப் பெரும் புலவர், பேராசிரியர் சைவப் பெரியார் கா.சுப்பிரமணிய(ன்) பிள்ளை தாமெழுதிய ‘தமிழர் சமயம்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

‘தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும், குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு புத்தாண்டுப் பிறப்பு விழா. தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை’” எனப் பேராசிரியர் சைவப்பெரியார் அ.கி. பரந்தாமனார் தாம் எழுதிய “” மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு”” என்னும் நூலில் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

‘தீபாவளி சமண சமயப் பண்டிகை. பாவாபுரி நகரிலே அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த வர்த்தமான மகாவீரர் இறந்த விடியற்கால நாளே தீபாவளியாகும். தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும் நரகாசுரன் புராணக் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தீபாவளி என்பதன் பொருள் விளக்கு வரிசை’ (தீபம் – விளக்கு, ஆவலி – வரிசை) என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய “சமணமும் தமிழும்”என்ற நூலில் சொல்லியிருக்கிறார்