உணவு - Food, கட்டுரைகள், செய்தி - News, பொது, மருத்துவம் - Medical

டெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன?

ஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வகைக் கொசு, மற்ற கொசுக்களைப் போலல்லாமல், பகல் வேளைகளில்தான் கடிக்கின்றது. இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோய் ஆகையால் எலும்பை முறிக்கும் காய்ச்சல் எனவும் அழைக்கப்படுகிறது.
உலகெங்கும் ஆண்டுக்கு 6 கோடி பேர் வரை டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுகின்றனர். 24,000 பேர் வரை டெங்குவினால் மரணமடைகின்றனர். ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் டெங்கு பாதிப்பு உள்ளது.

அறிகுறிகள்?
கடுமையான காய்ச்சல், வயிற்று வலி, தாங்க முடியாத அளவு தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, தொடர்ச்சியான வாந்தி, களைப்பு ஆகியவை டெங்குவின் அறிகுறிகள். தொற்றின் தீவிர நிலையில் தட்டணுக்கள் குறைவதால், உடலில் அரிப்பு ஏற்படும், சிவப்புப் புள்ளிகள் தோன்றும். காய்ச்சல் 104 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். இதனுடன் சோர்வு, தீவிரமானத் தலைவலி, உடல் வலி, கண் வலி, தசைகள் மற்றும் மூட்டு வலி, வாந்தி, உடலில் அரிப்பு, எலும்பு உடைவது போன்று வலி ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள்.

denguடெங்கு காய்ச்சலை ஏழு நாள் காய்ச்சல் என்று கூறுவார்கள். நோய் பாதிப்பு ஏற்பட்டு ஏழு நாட்களில் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் டெங்கு வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள ரத்தத் தட்டு அணுக்களை அழித்துவிடும். இந்தத் தட்டு அணுக்கள்தான் ரத்தம் உறைவதற்கு மிக முக்கியமான காரணம். ரத்தத் தட்டுக்கள் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லை எனில் உயிர் இழப்புகூட நேரிடலாம்.

டெங்கு பரவுமா?
பலரும் டெங்கு காய்ச்சல் என்பது தொற்று நோய்ப் போல ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது. டெங்கு காய்ச்சல் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவாது. ஆனால் டெங்கு பாதிப்பு இருக்கும் ஒருவரை கடித்த கொசு இன்னொருவரை கடிக்கும் போது அவருக்கும் டெங்கு பாதிப்பு வரக்கூடும்.

டெங்கு காய்ச்சலில் நான்கு வகை இருக்கிறது. அவற்றில் முதல் வகை டெங்கு காய்சல் மட்டும் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே வருவது. மற்றவை பின்னாட்களில் உங்களுக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது. டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும்.

காய்ச்சல் குறைந்ததும் உடலிலிருந்து டெங்கு வைரஸ் போய்விட்டது என்று நினைத்துக் கொள்வோம். ஆனால் இதற்குப் பிறகு தான் பிரச்சனையே ஆரம்பமாகும். டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு டெங்கு ஷாக் சிண்ட்ரோம் என்ற பாதிப்பு ஏற்ப்பட்டிருக்கும். இவர்களுக்குக் கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும்; சுவாசிக்கச் சிரமப்படுவார்கள்; ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள்.

டெங்கு காய்ச்சலுக்கு எனத் தனி சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டமால் (Paracetomol) மாத்திரையும், உடல் வலியைப் போக்க உதவும் மாத்திரைகளும் தரப்படும். சிலருக்கு மட்டுமே “அதிர்ச்சி நிலை”(Dengue Shock Syndrome) ஏற்படும். அதற்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் (Dextrose Saline) தேவையான அளவுக்கு ஏற்றப்பட வேண்டும். வைரஸ் பாதிப்பால், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூலமாக தட்டணுக்கள் கொண்ட ரத்தம் செலுத்தப்பட வேண்டும். உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுவலைப் பாதுகாப்புக்குள் வைத்துச் சிகிச்சை அளிக்க வேண்டும். டெங்கு ஐ.ஜி.எம்., ஹெமெட்டோ கிரீட் மற்றும் தட்டணுக்கள் பரிசோதனைகளின் மூலம் டெங்கு குணமாகிவிட்டதா என்று அறியலாம்.

உணவு வகைகள்
ஆரஞ்சுப் பழத்தில் நிறைய வைட்டமின்களும், இதர சத்துக்களும் காணப்படுகின்றன. செரிமானத்திற்கும், நன்றாக சிறுநீர் போவதற்கும் ஆரஞ்சு உதவுவதால் டெங்கு காய்ச்சலிலிருந்து விரைவில் விடுபட முடியும். கனிகளைக் கொடுத்த பப்பாளி மரத்தின் இலைகள் டெங்கு காய்ச்சலுக்கு சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு 2 பப்பாளி இலைகளை நன்றாக நசுக்கிப் பிழிந்து சாறெடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையிலும் இரவிலும் இந்தச் சாற்றை 2 ஸ்பூன் குடித்து வந்தால் டெங்கு காய்ச்சல் விரைவில் ஓடிப் போகும்.

டெங்கு காய்ச்சலால் உயிருக்கே போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு கஞ்சி தான் மிகமிகச் சிறந்த உணவாகும். கஞ்சி குடிப்பதால் உடலுக்கு நிறைய சக்தி கிடைக்கும். அதைக் குடிப்பதும் மிகவும் எளிது. இளநீரை நிறையக் குடிப்பதாலும் டெங்கு காய்ச்சல் விரைவில் குணமாகும். கனிமச்சத்துக்கள், எலெக்ட்ரோலைட்டுகள் உள்ளிட்ட நீர்ச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.

கேரட், வெள்ளரி உள்ளிட்ட பசுமை நிறைந்த காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சுத்தமான ஜூஸ்களைக் குடிப்பதால் டெங்கு காய்ச்சல் குணமாகும். நிறையப் பழச்சாறுகளைக் குடிப்பதாலும் டெங்கு காய்ச்சலிலிருந்து தப்பிக்கலாம். அதிலும் வைட்டமின் சி அதிகமுள்ள ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, கிவி, பப்பாளி உள்ளிட்ட பழங்களின் சாற்றைக் குடிக்கலாம். இதனால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது.

புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை உண்பதாலும் டெங்கு காய்ச்சலை விரட்டலாம். பால், முட்டை, மீன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடுவது நலம்.

சிட்ரிக் அமிலம் நிறைந்து இருப்பதால், எலுமிச்சையும் டெங்கு காய்ச்சலை விரட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தேவையில்லாத விஷத்தை முறிக்கும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு. ஆரஞ்சுப் பழத்தைப் போலவே, எலுமிச்சையும் செரிமானத்திற்கும் நிறைய சிறுநீர் வெளியேறுவதற்கும் உதவுகிறது.